இரா. சாணக்கியன் எம்.பி., நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையால் கடுப்பாகிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கு இன்று பதிலடி கொடுத்து, சாணக்கியன்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி, சாணக்கியனின் உரை குறித்து தமது விளக்கத்தை முன்வைத்தார்.
“ ராஜபக்சக்களுடன் சாணக்கியனுக்குதான் அரசியல் ‘டீல்’ இருந்துள்ளது, அவர் பட்டியிருப்பு தொகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.” – என சுட்டிக்காட்டி, அது தொடர்பான நியமன கடிதத்தை ஆதாரமாக முன்வைத்தார்.
ராஜபக்சக்கள் தன்னை வீழ்த்துவதற்கு புலிகளுடன்கூட ‘டீல்’ வைத்திருந்தனர் என்பதை மீள் நினைவூட்டிய ரணில் , சாணக்கியனுக்கு வேண்டுமானால் ‘ராஜபக்ச புராணம்’ கை தேர்ந்த விடயமாக இருக்கலாம் என வசைபாடினார்.
“ நீங்கள் வேண்டுமானால் மஹிந்த சரணம் கச்சாமி, பஸில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி என துதி பாடியிருக்கலாம், எனவே, என்னையும் அந்த பட்டியலில் இணைந்து விட வேண்டாம்.” – எனவும் கிண்டல் பாணியில் கோரிக்கையொன்றை முன்வைத்தார் ரணில் விக்கிரமசிங்க.
பிரதி சபாநாயகர் விவகாரம் குறித்து தான் ஏன் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் பேச்சு நடத்தினார் என்பதற்கான விளக்கத்தையும் அவர் வழங்கினார்.
“ தமிழக் கூட்டமைப்பும் ஒருவரை நிறுத்த முன்வந்தது. எனவே, எதிரணிகளை ஐக்கியப்படுத்ததே நான் முற்பட்டேன். சுமந்திரன், சாணக்கியன், செல்வம், சிறிதரனுடன் பேசியிருந்தேன்.” – என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய சிறிதரன், ரணில் தன்னுடன் பேச்சு நடத்தியதாக கூறுவது அப்பட்டமான பொய் என்றார். சித்தார்த்தன் என்பதையே சிறிதரன் என விளித்துவிட்டதாககூறி, ரணில் சமாளித்தார்.
Discussion about this post