தனியாகவோ, கூட்டணியாகவோ தேர்தலை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே உள்ளது. எனவே தேர்தலைப் பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் சக்தி எமக்கு இருக்கின்றது. தனியாகவோ, கூட்டணியாகவோ களமிறங்க நாம் தயார்.
எமது கட்சியுடன் இணைய முக்கிய பிரமுகர்கள் பலர் தயாராக உள்ளனர். கட்சியை விட்டு வெளியேறியவர்களை விடவும் வரவுள்ளவர்கள் சிறந்தவர்கள்- என்றார்.
அதேவேளை அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், அமைச்சு பதவிகளை கைவிட்டால் நாளை வேண்டுமானாலும் மீண்டும் கட்சியில் இணையலாம் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post