தேங்காய் எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறி பாம் எண்ணெய் இறக்குமதி செய்ய கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பாம் எண்ணையை தேங்காய் எண்ணெயில் கலந்து விற்பனை செய்யும் மோசடி இடம்பெறும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாம் எண்ணெய் இறக்குமதி
பாம் எண்ணெய் பெருமளவில் இறக்குமதி செய்தால், நாட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகளை பராமரிக்க முடியாது கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 3,849 மெற்றிக் தொன் எண்ணெய் கைத்தொழில் அமைச்சின் அனுமதியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியினை பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.
தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை
இதேவேளை, 3000 உள்ளுர் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகளை மீட்பதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போது நாட்டில் வருடாந்த நுகர்வுக்குத் தேவையான தேங்காய் எண்ணெய்யின் அளவு 290,000 மெற்றிக் தொன்களாகும்.
இருப்பினும், தற்போது 40,000 மெட்ரிக் தொன் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றதெனவும் எஞ்சியுள்ள 250,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் வடிவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post