ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இணை அனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருமேயானால், அது தொடர்பாக எமக்கு எவ்வித கோபமும் இல்லை. மாறாக அவர்கள் முன்வைக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சு நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
இவ்வாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் ஒன்றிணைந்து நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன. அதில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே நீதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இணை அனுசரணை நாடுகள் என்பவை பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய நாடுகளாகவே உள்ளன. இருப்பினும் நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னெடுத்துவரும் நியாயமான நடவடிக்கைகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றோம் என்றும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேள்வி – அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை முன்வைப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை தயார்நிலையில் உள்ளதா?
பதில் – இந்த இணை அனுசரணை நாடுகள் பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்கள் சார்ந்திருக்கும் நாடுகளாகவே இருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிறந்த நிலையிலிருப்பது தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னெடுத்துவரும் செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றோம்.
காணாமல்போனோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு விவகாரம் ஆகியவற்றின் நாம் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை எட்டியிருப்பதுடன் இந்தப் பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வை வழங்கவேண்டுமென்ற நியாயமான நோக்கத்துடன் செயலாற்றி வருகின்றோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருவது தொடர்பாக எமக்கு எவ்விதக் கோபமும் இல்லை. அதற்குரிய தீர்வு தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சு நடத்த நாம் தயாராக இருக்கின்றோம். அதுமட்டுமன்றி புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடனும் இவ்வாறான பேச்சுக்களை மிகவும் வெளிப்படையாகவே முன்னெடுத்திருக்கின்றோம்.- என்றார்.
Discussion about this post