இந்திய அரசாங்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தன்னை தமிழ் மக்களுக்காக ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 35 ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது.
1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் நல்லூர் முன்றலில் தனது இனத்தின் விடிவுக்காக நீராகாரம் கூட அருந்தாது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், பன்னிரண்டாவது நாளில், செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி தமிழ் மக்களுக்காகத் தன்னை ஆகுதியாக்கினார்.
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்ற ஐந்து அம்சக் கோரிக்கைளே தியாகி திலீபனால் முன்வைக்கப்பட்டன.
யாழ்ப்பாண, ஊரெழுவில் 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் பிறந்தார். தனது 24 ஆவது வயதில் தமிழினத்துக்காகத் தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
“நான் மரணத்தை மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும்தான் தழுவிக் கொள்கின்றேன். என் தலைவரின் தலைமையில் அனைத்து மக்களும் கிளர்ந்தெழுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன். இந்த மாபெரும் மக்கள் புரட்டி என்றோ ஒருநாள் எம் இலட்சியத்தை நிறைவேற்றியே தீரும். எம் மக்கள் மீது கொண்ட அசையாத நம்பிக்கையின் பேரில் – அவர்கள் மீது கொண்ட தாளாத பாசத்தின் பெயரில் அவர்களின் விடிவுக்காக நான் என் தோழர்களை நோக்கி மெதுவாகப் போய் கொண்டிருக்கின்றேன்” என்று உணவு தவிர்ப்பு மேடையில் பேசிய திலீபன் கூறியிருந்தார்.
தியாகி திலீபனின் நினைவேந்தல் தமிழ் மக்களால் ஆண்டுதோறும் உணர்வெழுச்சியுடன் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தாயகத்தில் பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் மக்கள் கடந்த காலங்களில் நினைவேந்தலை முன்னெடுத்திருந்தனர். இம்முறையும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Discussion about this post