வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (Road Development Authority) தலைவர் சி. பி. அத்துலுவகே பதவி விலகல் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான தலையீடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளருக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளதாக சி. பி. அத்துலுவகே குறிப்பிட்டுள்ளார்.
தன்னிச்சையான செயற்பாடு
தனது பதவி விலகல் தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கடந்த காலங்களில், இந்த முறையற்ற அழுத்தங்கள் மற்றும் குறுக்கீடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போது, நிறுவனத்தின் உயர் நிர்வாகத்தின் மீது நேரடியான செல்வாக்கு செலுத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாக மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளில் தலையீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ந்தும் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் அதிகாரியின் கீழ் கடமையாற்ற விருப்பம் இல்லை என்பதால், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகல் செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post