26 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி வி.பார்த்தீபன், நேற்று தனது தாயின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டார்.
2017ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட அவர், அதன்பின்னர் இப்போது அவரது தாயின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதற்காக சிறை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த பார்த்தீபனின் தாய் விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி கடந்த புதன்கிழமை காலமானார். தனது மகனின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருந்த இவர் மகனின் விடுதலையையைக் காணாமலேயே உயிர் பிரிந்தார்.
1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பார்த்தீபன், கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கிக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த வழக்கு நடைபெற்று வருகின்றது.
Discussion about this post