உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல் 13 நாள்களைக் கடந்தும் தொடரும் நிலையில், தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள இர்பின் மற்றும் சுமி போன்ற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனின் பிரதான நகரங்களை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நகர்வுகள் மேற்குலக நாடுகளால் முன்னெடுக்கப்படுகின்றன.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதியாகும் எண்ணெய்யைத் தடை செய்வதாக அமெரிக்காவும், பிரிட்டனும் அறிவித்துள்ளன. அத்துடன் ரஷ்ய எரிவாயுக் கொள்வனவை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்குக் கொண்டு வரவுள்ளது என்றும் கூறப்படுகின்றது.
ரஷ்யப் பொருளாதாரத்தை இலக்கு வைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருக்கின்றார்.
அதேவேளை, நாளொன்றுக்கு மேலதிகமான 4 லட்சம் பீப்பாய் எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடியும் என்று வெனிசுவேலா தெரிவித்துள்ளது. ரஷ்ய எண்ணெய்க்கு மாற்றீடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
தென் அமெரிக்க நாடுகள், நாளொன்றுக்கான எண்ணெய் உற்பத்தியை 8 லட்சம் பீப்பாய்களில் இருந்து 1.2 மில்லியன் பீப்பாய்கள் வரையில் அதிகரிக்க முடியும் என வெனிசுவெலா எரிபொருள் சம்மேளனத்தின் தலைவர் ரெனால்டோ குயின்டேரோ தெரிவித்துள்ளார்.
Discussion about this post