ஜனநாயக விரோத சக்திகளுடன் கலந்துரையாடி மீண்டும் மீண்டும் தமிழ்
மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தப் போகின்றீர்களா? இவ்வாறானவர்களிடம்
கலந்துரையாடுவது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம். மனோ
கணேசன் ஆகிய உங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா என
தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி
எழுப்பியுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பாராளுமன்ற
உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோருக்கு எழுதிய பகிரங்க
மடலிலேயே இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ் கட்சிகளின் கலந்துரையாடலில் தாங்கள் இருவரும் கலந்து
கொண்டு தெரிவித்த கருத்துக்களை வரவேற்கின்றேன்.
தமிழ், முஸ்லிம் உறவுகள் ஒன்றிணைந்து பலமான அமைப்பாக உருவாக வேண்டும்
என்ற தங்கள் இருவரின் கருத்துக்களும் காலத்தின் தேவை என்பதை தமிழர்
விடுதலைக் கூட்டணி நன்கு உணர்ந்துள்ளது. தங்களின் முயற்சி வெற்றி பெற
வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.
2004ம் ஆண்டு தேர்தல் ஜனநாயகத்தை முற்றுமுழுதாக
குழிதோண்டிப்புதைத்துவிட்டு விடுதலைப் புலிகளின் முழு ஒத்துழைப்புடனும்,
ஆசியுடனும் தேர்தலில் களமிறங்கி வாக்குச்சாவடிகளில் அவர்களின்
ஆதரவாளர்களும் விடுதலைப் புலிகளும் நடந்து கொண்டவிதம் உலகத் தமிழர்களையே
வெட்கித்தலைகுனிய வைத்தது என்பதை எவ்வாறு மறந்தீர்கள்?
அதுமட்டுமல்ல 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் தமிழ்
மக்களும் அழிவதை வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப்
பேசுகிறார்கள். 2015ஆம் ஆண்டு நீங்கள் சேர்ந்து ஆதரவு கொடுத்த நல்லாட்சி
அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுகத்தை அனுபவித்துக்
கொண்டிருந்தார்கள்.
அப்போது சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் பற்றி ஏன் பேசி ஒரு முடிவுக்கு
வரவில்லை. பிரச்சனைகளை தீர்த்து வைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இருந்தும்
கண்டும் காணாமல் விட்டு விட்டு இப்போது மட்டும் எங்கிருந்து ஞானம்
வந்தது.
இவ்வாறானவர்களிடம் கலந்துரையாடுவது என்பது உங்களுக்கு பெரும்
தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா, ஜனநாயக விரோத சக்திகளுடன்
கலந்துரையாடி மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தப்
போகின்றீர்களா என அந்த மடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post