மோதல் நடக்கும் இரு நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக ரஷ்யா இன்று தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்த இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அமைய இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
உள்ளூர் நேர்ப்படி காலை 6 மணி முதல் தற்காலிகப் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தத்தால் வோல்னோவாகா மற்றும் மரியுபோல் நகரங்களில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியே வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இன்று 10 ஆவது நாளாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. சுமி, கீவ், செர்னிஹிவ் நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான எச்சரிக்கை ரஷ்யத் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சத்திலிருக்கின்றனர்.
ரஷ்ய படைகள் தெறு துறைமுக நகரான மைகோலேய்வ் மற்றும் மற்றொரு துறைமுக நகரான ஒடெஸ்ஸாவில் முன்னேறி வருகின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்ஹிவ், செர்னிஹிவ் மற்றும் மேரியோபோல் போன்ற முக்கிய நகரங்கள் தொடர்ந்தும் உக்ரைன் வசம் உள்ளன என்று தெரிகின்றது.
அதேநேரம், முந்தைய நாள்களில் இருந்ததைவிடக் கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் குறைவாக நடந்துள்ளன என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேரியோபோல் தெற்கு துறைமுகம் நகர் மீதான முற்றுகையில் ரஷ்ய இராணுவம் கவனம் செலுத்துவதே இதற்குக் காரணம் என்று நம்பப்படுகின்றது.
ரஷ்ய – உக்ரைன் மோதலால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த மாதம் 24ஆம் திகதிக்குப் பின்னர் சுமார் 10 லட்சம் மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் கூறுகின்றது.
மறுபுறத்தில் நேட்டோவின் செயற்பாடுகள் தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்திருக்கிறார். உக்ரைன் வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை நேட்டாவால் நிராகரிக்கப்பட்டமையே அதற்குக் காரணம்.
உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், அத்துமீறிப் பறப்பில் ஈடுபடும் ரஷ்ய போர் விமானங்களை நேட்டோ விமானங்கள் சுட்டு வீழ்த்த வேண்டி நேரும். அது மூன்றாவது உலகப்போரை ஏற்படுத்திவிடக்கூடும் என்று நேட்டோ அஞ்சுகின்றது.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலர் பிளிங்கென், நிச்சயம் உக்ரைன் மக்கள் வெற்றிபெறுவார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த வெற்றிக்கு எத்தனை காலம் எடுக்கும் என்பதைக் கணிக்க முடியாவிட்டாலும், சர்வதேச சமூகம் உக்ரைனுக்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய உறுதி பூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post