கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி இன்று(08) காலை 10 மணி முதல் இடைக்கிடையே தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
வீதியின் இருமருங்கிலுமுள்ள மண்மேடுகள் மற்றும் அபாய நிலையிலுள்ள கற்பாறைகளை அகற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இன்று(08) முற்பகல் 10 மணியிலிருந்து நாளை(09) மாலை 06 மணி வரை பஹல கடுகன்னாவ பகுதியில் வீதியை மூடி பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், பஹல கடுன்னாவ பகுதி இன்று(08) மாலை 06 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு முழுமையாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்பாறையொன்றை வெடிக்கச் செய்வதற்காக இரசாயன பொருட்கள் உபயோகிக்கப்படவுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வீதி மூடப்படவுள்ளதால் ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து கண்டி வரை பயணிக்கும் வாகனங்கள் வரக்காபொல, அம்பேபுஸ்ஸ சந்தியில் வலது பக்கமாக திரும்பி குருநாகல் வீதியூடாக கண்டிக்கும் கேகாலை, கரண்டுபன ஊடாக ரம்புக்கனை நகருக்கு பிரவேசித்து ஹத்தரலியத்த வீதியூடாக கலகதெர வழியே கண்டிக்கும் மாவனெல்ல நகரிலிருந்து ஹெம்மாத்தகம ஊடாக கம்பளை வீதி வழியாக கண்டிக்கும் பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகளையும் இந்த மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post