தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை கோரிக்கை முன்வைத்துள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாளர் நா.புவனசுந்தரம் இன்று வியாழக்கிழமை (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களிடையே இன்று ஒரு மறுமலர்ச்சி
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களிடையே இன்று ஒரு மறுமலர்ச்சி பரிணமித்திருக்கின்றது. உலக அரங்குகளில் எமது குரல் ஓங்கி ஒலிக்க நாம் ஒரு பலமான மக்கள் கூட்டம் என்ற உண்மையை நிலைநிறுத்துவது அவசியம்.
ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் அனாதைகளாக அலைந்து திரிகிறார்கள். நாம் நம்பிய அனைவருமே தேர்தல்களின் பின்னர் எம்மை ஏமாற்றியே வருகிறார்கள். தேர்தலில் வாக்குறுதி கொடுத்த யாருமே அதன் பின்னர் எம்மை மதித்ததில்லை. இம்முறை எமக்கு ஒரு புதிய தெம்பு பிறந்துள்ளது. வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்து கொண்டே நாம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம்
.நம்பியவர்கள் அனைவரும் கைவிட்டனர்
நாம் நம்பிய அனைவரும் எம்மைக் கைவிட்ட போதும், நாம் எமது உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை என்பதையும், அதற்காகப் போராடும் எமது உணர்வுகளை இன்னும் இழந்து விடவில்லை என்பதையும் அத்துடன் எமது வலிகளையும் வேதனைகளையும் இந்த உலகுக்கு உரக்கச் சொல்லப் போகிறோம்.
வெற்றி பெறும்வரை எமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவது எமது வரலாற்றுக் கடமை.
எமக்கு கிடைத்த சந்தர்ப்பம்
உள்நாட்டுக்கு உள்ளேயும், சர்வதேச சமூகத்தோடு இணைந்தும், எமது இராஜதந்திர, புத்திபூர்வமான அணுகுமுறைகள் ஊடாகவும் எமது மக்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்பவோ இயலாதிருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இந்தத் தேர்தல் எங்களுக்குத் தந்திருக்கின்றத
இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள பெரும்பான்மை கட்சிகளினாலும் சிவில் சமூக அமைப்புக்களினாலும் முன்மொழியப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஏகமனதான தீர்மானமெடுத்துள்ளது.
தமிழ் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post