புதிய இணைப்பு
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor of India) அஜித் தோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை.
இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்றும் தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன். எம்.ஏ.சுமந்திரன்.
ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், சந்திப்பில் சிறீதரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த போதிலும், வெளிநாட்டுப் பயணமொன்றுக்குச் செல்ல வேண்டியிருந்ததன் காரணமாக, சந்திப்பின் தொடக்கத்திலேயே சிறீதரன் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் பிரதிநிதிகள்
இந்தநிலையில், அஜித் தோவலை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman), அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் (Marudapandi Rameswaran), கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் (Aravinda Kumar) மற்றும் தொழில் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) ஆகியோர் மரியாதை நிமித்தமாக கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியாவிற்குமிடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் சமூக பொருளாதார விடயங்களை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post