வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புக்களுடன் விரைவில் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பில் ஏற்கனவே தமிழ் மக்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ள பின்னணியிலேயே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி எனும் அடையாளம் கிடைக்காவிட்டாலும் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவதாக அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தேசியப் பிரச்சினை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசியப் பிரச்சினை தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களும், தென்னிலங்கை மக்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு காணப்பட வேண்டும்.
தேர்தல் அரசியலை மையப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இனவாதத்தினை உயர்த்துவதன் மூலம் நன்மைகளை அடைவதற்கு எதிர்காலத்திலும் இடமளிக்க முடியாது.
இந்த அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
வழக்குத் தாக்கல்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியை ஏற்றமைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை நீதிமன்றத்தின் ஊடாக நிறைவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
சுதந்திரக் கட்சியின் பெயர்ப்பலகையை மட்டும் சிலர் வைத்திருகின்றார்கள். ஆனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்ற பேருந்து எனது கையில் தான் உள்ளது.
ஆகவே, அந்தக் கட்சியின் வழக்கு விவகாரங்கள் எமது பயணத்தினை தடுத்து நிறுத்தி விடமுடியாது.
அதிபர் தேர்தல்
எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. வழக்கு விவகாரங்கள் நிறைவடைந்தால் அந்த கட்சியின் ஊடாகப் போட்டியிடுவோம்.
இல்லையென்றாலும் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை.
தேர்தல்கள் காலத்தில் உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் பேசி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்ளும் கலாசாரத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் அதிபர் தேர்லில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தேன்” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post