தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் பிளவும் இல்லை. அவர்கள் ஓரணியாகச் செயற்படுகின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகக் கட்சி. கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட முழு உரிமை உண்டு என்று தெரிவித்த அவர், சிலரின் கருத்துக்களை வைத்துக்கொண்டு கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடு, பிளவு என்று எடைபோடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
உண்மையில் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் பிளவும் இல்லை. அவர்கள் ஓரணியாகச் செயற்படுகின்றார்கள் என்று கூறிய இரா.சம்பந்தன், உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடாது உரிய காலத்தில் அதை அரசு நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலையும் அரசு விரைந்து நடத்த வேண்டும் என்று கூறிய அவர், எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
Discussion about this post