இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனும், சிவில் சமூக அமைப்புகளுடனும் அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெறுகின்றது.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமெரிக்காவின் பிரதிநிதி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
சிவில் சமூக அமைப்புக்களின் பிரநிதிகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆனால் இந்த விடயத்தில் மேலும் முன்னேற்றகரமான நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேசப் பிரகடனங்களுககு அமைவாகத் திருத்தியமைக்க இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதான பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கள் மற்றும் அடங்குமுறைகள் தற்போதும் தொடர்கின்றன.
கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய அதேவேளை, சிவில் சமூக மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் செயற்றிறன் மிக்கவையாகவும், வெளிப்படைத் தன்மை வாய்ந்தவையாகவும், சுயாதீனமானவையாகவும் இருக்க வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வை அடைந்து கொள்வதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
Discussion about this post