திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட சேருநுவர – தங்கநகர் யுவதியின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு மீதான விசாரணை மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் முகமட் பௌசான் முன்னிலையில் இன்றையதினம் (16-08-2024) எடுத்துக் கொள்ளப்பட்டது
இதன்போது குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் சகோதரியான 7ஆம் எதிராளி மற்றும் 4ஆம் எதிராளிகளுக்கு பிணை வழங்கியும், ஏனைய 5 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலை நீடித்தும் உத்தரவிட்டுள்ளார்.இன்றையதினம் நீதிமன்றில் குற்றவாளிகள் சார்பில் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிபதி, குறித்த தரப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான காதலனின் சகோதரியான 7ஆம் குற்றவாளியையும், ஜே.சி.பி இயந்திரத்தின் தரகரான 4ஆம் எதிராளியையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதோடு ஏனைய 5 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தும் முகமாக விளக்கமறியலை நீடித்தும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கடந்த யூலை மாதம் 5ஆம் திகதி சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான நடேஸ்குமார் வினோதினி என்ற இளம் பெண் படுகொலை செய்யப்பட்டு கிளிவெட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாகவுள்ள கிணறு ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து பிரதான சந்தேகநபரான யுவதியின் காதலன் உட்பட சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது
Discussion about this post