சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், போர் நடந்த காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விடவும் தற்போது சிறிலங்காவின் பொருளாதார நிலை மோசடைந்துள்ளது. இந்தக் கடன் பொறிக்குள் இருந்து சிறிலங்கா தன்னைக் காத்துக் கொள்வதற்கு தமிழ் தேசத்தை அங்கீரிப்பதே ஒரே தீர்வாக இருக்கும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கு இப்போது உள்ள வருமானத்தை விடவும், புலம்பெயர் தமிழர்களின் வருமானம் அதிகமாக இருக்கின்றது. உலகில் மிகப் பலமான நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் அந்த அரசுகளுக்கு சுமையாக இல்லாமல் மிகச் சிறந்த ஒரு சமூகமாக இருக்கின்றனர். அந்த மக்களின் உதவிகளை, முதலீடுகளை பெற்றுக் கொள்ளமுடியும்.
நாட்டின் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதுபோதும், தமிழ் மக்களின் உரிமைகளைக் கொடுக்கக் கூடாது என்ற இனவாதப் போக்கோ மேலேழுந்துள்ளது. மேற்கத்திய நாடுகளுடனும், இந்தியாவுடனும் இணைந்து ஏதோ ஒரு வகையில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பலாம் என்று இலங்கை கனவு காண்கின்றது.
இதுவரை தமிழரை அழிக்க சீனாவின் கால்களில் வீழ்ந்த சிறிலங்கா, தற்போது மேற்கத்தேய மற்றும் இந்தியாவின் கால்களில் வீழ்க்கின்றது. அதை சீனா பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. தனது கடனில் இருந்து இலங்கையைத் தப்பவிடாது. சீனாவின் கப்பல் வருவதற்கு முதல் நாள் உளவு பார்ப்பதற்கென இந்தியா தன்னுடைய விமானத்தை இலங்கைக்கு வழங்கி இலங்கைத் தீவிலுள்ள பூகோளப் போட்டியை இன்னும் தீவிரமடைய வைத்திருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் எவையும் தமிழ் மக்களுக்கு நன்மையைக் கொடுக்கக்கூடியவை அல்ல.
நாங்கள் சிங்கள மக்களுக்கு சொல்வது, இந்த நிலைமையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 74 வருடங்களாக ஒற்றை ஆட்சி என்கிற அடிப்படையிலேயே நியாயமற்ற தோற்றுப் போன கொள்கையை தொடர்ந்து கடைபிடிப்பதால் வரக்கூடிய விளைவுகளை சிங்கள மக்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களிடையே பிரிவுகள் ஒன்றும் இல்லாமல் உள்நாட்டிலே நாங்கள் எங்கள் ஒவ்வொருவரையும் மதிக்கக்கூடிய ஒவ்வொரு தேசங்களையும் ஏற்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகினால் நாங்கள் இந்த பூகோளப்போட்டியில் எங்களுடைய நன்மைக்காகவும் பொது நன்மைக்காகவும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். அதை செய்யத் தவறினால் வெளி சக்திகள் தங்களுடைய தேவைகளை அடைவதற்கு எங்களுடைய பிரிவுகளை பயன்படுத்துகின்ற நிலைமையே தொடர்ந்து காணப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post