சட்டவிரோதமான வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை திருகோணமலையில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் (23) கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தும் வர்த்தக வெடிபொருட்களான தண்ணீர் ஜெல் குச்சிகள் மற்றும் மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், இந்த கைதின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கடற்படைக் கட்டளைத் தளபதிகளான வலகம்ப மற்றும் விஜயபா ஆகியோர் திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் திருகோணமலை காவல்துறையினரின் உதவியுடன் இந்த விசேட தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் இந்த வெடிபொருட்கள் சந்தேக நபரால் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதுடைய பொடுவகட்டு செந்தூர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், வெடிபொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post