நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியநேந்திரன் (P. Ariyanethiran) ஆதரவாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவானது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிய உள்ளது.
இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) பிரித்தானிய கிளையின் தலைவர் சொ.கேதீஸ்வரன் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பா. அரியநேந்திரன், அத்துடன் அவருக்கு ஆதரவு வழங்கிய இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களான சி.சிறிதரன், சிறிநேசன், ஈ.சரவணபவன், ஜீவன் மற்றும் வேழமாலிகிதன் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான கூட்டமானது நாளையதினம் வவுனியாவில் நடைபெற உள்ளதாக அறிய முடிகிறது.
மத்திய குழு ஆதரவு
இவ்வாறான செயற்பாடு என்பது உண்மையில் ஒரு வேதனையுடன் வேடிக்கை அளிக்கின்ற விடயமாகும்.
ஏனெனில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரான உமாச்சந்திரா பிரகாஷ் தனது முதன்மை வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்துவிட்டு அடுத்த விருப்பு வாக்கினை தமது கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசக்கு (Sajith Premadasa) அழிப்பதாகவும், அதுபோல தமிழ் பேசும் மக்களை வாக்களிக்குமாறும் தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறு இருக்கையில் இலங்கை தமிழரசு கட்சியானது நேரடியாக முதன்மை வாக்கினை சஜித் பிரேமதாசக்கு வழங்குமாறு கூறியமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் ஆகும்.
இலங்கை தமிழரசு கட்சியானது எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்கப் போவதில்லை என அறிவித்திருக்கலாம்.
அல்லது குறைந்த பட்சம், உமாசந்திரா பிரகாஷ் தெரிவித்ததை போல முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்துவிட்டு அடுத்த விருப்பு வாக்கினை சஜித் பிரேமதாசாக்கு அளிக்குமாறு என்றாலும் கூறியிருக்கலாம்.
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
இது இரண்டும் இல்லாமல் தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் இருக்கும் சிலரின் விருப்புகளுக்காகவும், சுயநலங்களுக்காகவும் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாளித்தமை மிகவும் மன வருத்தத்தை தருகின்ற ஒரு விடயமாகும்.
தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் சமூக மட்ட சிவில் அமைப்புகள் ஆகியன இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு எடுத்த இந்த தீர்மானமானது ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் செய்கின்ற ஒரு வரலாற்று துரோகமாகவும்.
அத்துடன் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்ட கூட்டத்திற்கு மத்திய குழு உறுப்பினர்கள் பலருக்கு அழைப்பு கூட விடுக்கவில்லை என அறியமுடிகிறது. மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் இல்லை.
அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையானது மக்களுடன் ஒரு சந்திப்பை நடாத்தி இருந்தது. அந்த சந்திப்பில் தமிழ் பொது வேட்பாளருக்கே ஆதரவளிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இதுபோலவே திருகோணமலை மாவட்ட கிளையும், அங்குள்ள மக்களுடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என தீர்மானித்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட கிளையில் உள்ள பெரும்பாலானவர்களின் முடிவும், மக்களது முடிவும் அரியநேந்திரனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதாகவே காணப்படுகின்றது.
Discussion about this post