தமிழக மாணவியொருவரை, அச்சுறுத்தி பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஈழ அகதி கோரிக்கையாளர் ஒருவருக்கு பரமட்டா நீதிமன்றால் நேற்று (13) ஏழாண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
சிட்னியில், துங்காபி எனும் இடத்தில் வசித்துவந்த , ஈழ அகதி கோரிக்கையானரான, பிரசாந்தன் என்பவரே இத்தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
இந்தியாவின், தமிழக மாநிலத்திலிருந்து உயர்கல்விக்காக, இற்றைக்கு ஈராண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா வந்த மாணவியொருவர், நிறுவனமொன்றில் பகுதி நேர தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஈழ அகதி கோரிக்கையாளர், குறித்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தமிழக மாணவிமீது, அவருக்கு காதல் ஆசை ஏற்பட, காதல் தூது அனுப்பியுள்ளார். அதனை ஏற்பதற்கு மாணவி மறுத்துள்ளார்.
இதனால் கடுப்பான ஈழ அகதி கோரிக்கையாளர், அச்சுறுத்தல் – மிரட்டல் ஊடாக மாணவியை பணிய வைக்க திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்கமைய குறித்த மாணவிக்கு போக்குவரத்து சேவை வழங்கும் போர்வையில், அவரை வாகனத்தில் ஏற்றி, வர்த்தக நிறுவனங்கள், குவிந்துள்ள வணிக வலயத்துக்கு கொண்டுசென்று, துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, அவற்றை ஒளிப்பதிவும் செய்துள்ளார் பிரசாந்தன்.
தனது தேவைகளை நிறைவேற்றாவிட்டால் – தனது ஆசைக்கு இணங்காவிட்டால் காணொளிகள் முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதவிவேற்றம் செய்யப்படும் என, மாணவிக்கு அச்சுறுத்தல் விடுத்து, அவரை உள ரீதியிலும் சித்திரவதைப்படுத்தியுள்ளார்.
இக்காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் கொரோனாவும் கோரத்தாண்டவமாடியதால், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவிகள் கிட்டவில்லை, எங்கு செல்வது, என்ன செய்வது என தெரியாமல், அவர் பரிதவித்துவந்துள்ளார்.
கொரோனா காலப்பகுதியில் சிட்னியில் உள்ள தன்னார்வ தொண்டர்களால், அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுவந்த நிலையில், மேற்படி தன்னார்வ தொண்டர்களிடம் தனக்கு நேர்ந்தவற்றை தமிழக மாணவி, விவரித்துள்ளார்.
பின்னர், அவர்களின் உதவியுடன் இது சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை வேட்டையை ஆரம்பித்த பொலிஸார், ஈழ அகதி கோரிக்கையாளரையும் கைது செய்து, காணொளிகளையும் மீட்டனர்.
பரமட்டா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இரு வருடங்களாக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post