நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு போலி அனுமதி ஆஃபர் கடிதங்களைக் கொடுத்து கனடாவுக்கு அனுப்பிய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வெறும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், அவரால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
700 இந்திய மாணவர்களை ஏமாற்றிய நபர்
இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, ப்ரிஜேஷ் மிஸ்ரா (Brijesh Mishra, 37) என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்கள் 700 மாணவர்கள்.
அவர்கள் கனடாவில் படிப்பை முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலை உருவாயிற்று.
மோசடி நபருக்கு குறைவான தண்டனை
இந்நிலையில், சுற்றுலா விசாவில் கனடா வந்த மிஸ்ராவை 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கனேடிய பொலிசார் கைது செய்தார்கள். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றம்
மிஸ்ராவுக்கு வெறும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதால், அவரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
மிஸ்ராவால் ஏமாற்றப்பட்டவர்களில் பலர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படும் நிலை உருவானது. ஆனால், இப்போது அவர்களில் சிலருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளும், நீண்ட கால பணி அனுமதிகளும் வழங்கப்படும் வகையில் நிலைமை மாறியிருந்தாலும், தங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்திய மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவு என அவர்கள் கருதுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான Ravinderpreet Singh(28) என்னும் இந்திய மாணவர் கூறும்போது, மிஸ்ராவால் என் வாழ்வில் பல ஆண்டுகள் வீணாகிப்போயின, மன அழுத்தத்தையும் பணப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டேன், அவருக்கு தண்டனை கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி, ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறியுள்ளார்.
இந்த இந்திய மாணவர்களுக்காக வழக்காடிய ரொரன்றோவை மையமாகக் கொண்ட புலம்பெயர்தல் சட்டத்தரணியான Sumit Sen என்பவர் கூறும்போது, மிஸ்ராவுக்கு குறைந்தபட்சம் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையாவது விதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால், மிஸ்ராவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், ஏற்கனவே அவர் சிறையில் அடைக்கப்பட்டதால், இனி அவர் 19 மாதங்கள் மட்டும் சிறையில் செலவிட்டால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post