கிளிநொச்சியில் கடந்த 12 ஆம் திகதி மிகவும் இரகசியமாக திறக்கப்பட்ட
காணாமற் போனோருக்கான அலுவலகம் எதிர்வரும் ஜெனீவாவை எதிர்கொள்வதற்கான ஒரு
நாடகமே என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்
அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை நாம் தொடர்ச்சியாக எதிர்த்தே
வந்துள்ளோம், இதனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு
எவ்வித நீதியும் கிடைக்கப்போவதில்லை இதனை நாங்கள் அனுபவ ரீதியாக
உணர்ந்துள்ளோம். சர்வதேசம் ஓஎம்பி மீது மெல்லிய நம்பிக்கை
வைத்திருந்தது. எனவே நாம் ஓஎம்பியின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதற்காக
2019.07.20 அன்று பலத்த ஆதாரங்கள் உள்ள ஐந்து சம்வங்களை ஓஎம்பி
அலுவலகத்திற்கு வழங்கினோம் இதனை அப்போது தலைவராக இருந்த சாலிய பீரிசும்
ஏற்றுக்கொண்டு தீர்வினை தருவதாக கூறியிருந்தார். ஆனால் இன்று வரை
அவற்றுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை. இதன் மூலம் இந்த ஓஎம்பி
அலுவலகத்தினால் எதுவும் ஆகப்போதில்லை என்ற உண்மை அனைவருக்கும்
தெரியவந்தது.
இந்த நிலையில் தற்போது கொரேனா பரவல் காரணமாக ஒன்று கூடவோ, எதிர்ப்பு
போராட்டங்கள் நடத்தவோ, முடியாதவாறு சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும்
விதித்துவிட்டு இரகசியமாக கிளிநொச்சியில் ஓஎம்பி அலுவலகத்தை திறந்து
செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது எமக்கு பலத்த சந்தேகத்தை
ஏற்படுத்தியிருக்கின்றது. யாருக்காக இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டதோ
அவர்கள் எவருக்கும் தெரியாது இதனை கிளிநொச்சியில் இரகசியமாக
மேற்கொண்டமைக்கான காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பிய அவர்
சர்வதேசத்தையும், ஜெனீவாவையும் எதிர்கொள்வதற்காக அரசு போடும் நாடகமே இது
என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
அமைப்பாகிய நாம் எட்டு மாவட்டங்களின் உறவினர்களையும்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் எனவே நாம் கிளிநொச்சியில் இரகசியமாக
ஆரம்பிக்கப்பட்ட ஓஎம்பி ஆலுவலகத்தை எதிர்கின்றோம், இச் செயற்பாட்டை
வன்மையாக கண்டிக்கின்றோம். எனவும் தெரிவித்தார்.
Discussion about this post