தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் பிணை அனுமதி வழங்கியது.
பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இவர்கள் அதன்பின்னர் தடுப்பக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோதே அவர்களுக்குப் பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், ரணித்தா ஞானராஜா, சுரங்க பண்டார, சுவாதிகா ரவிச்சந்திரன் ஆகியோர் மன்றில் தோன்றினர்.
சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் சந்தேக நபர்கள் நால்வர் சார்பான பிணை விண்ணப்பத்தை திறந்த மேல் நீதிமன்றில் முன்வைத்தார். அரச தரப்பு சட்டத்தரணி அரச தரப்பு வாதங்களை மன்றில் முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன சந்தேக நபர்கள் நால்வருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணை அனுமதியை வழங்கினார்.
Discussion about this post