இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு தேர்தல் இன்றி ஒருவரை ஏகனமதாக தேர்ந்தெடுக்கும் வகையில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் கலந்துரையாடுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும் தேர்தல் ஒன்றின் மூலமே தலைமை தேர்ந்தெடுக்கப்படும் நிலைமை காணப்படுவதாக கட்சியின் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களை போல இந்த விடயத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விட்டுக்கொடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் எம்.ஏ.சுமந்திரனை எதிர்கொள்வதில் அவர் உறுதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ள கட்சியின் தலைமைத்துவத்திற்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரனை, சிவஞானம் சிறீதரன் நேரடியாக எதிர்கொள்வார் என கூறப்படுகின்றது.
திருகோணமலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதுடன், அன்றைய தினமே வெற்றிபெற்ற வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் சபையிலுள்ள 400 உறுப்பினர்கள் அக் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post