பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயதுச் சிறுமி பாத்திமா ஆயிஷா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரைத் தோட்டத் தொழிலாளர் உள்ளிட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் 29 வயதான ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 29 வயதான நபர், பாத்திமா ஆயிஷாவின் நண்பர் என்றும், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயிஷாவின் தந்தையும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார், கைது செய்யப்பட்டவர் அடிக்கடி ஆயிஷாவின் வீட்டுக்கு வருபவர் என்றும், சம்பவ தினத்தன்று அந்தப் பகுதியில் அவரது நடமாட்டம் கவனிக்கத்தக்க அளவில் இருந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
முன்னதாகக் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரின் வீட்டில் இருந்த சாரத்தில் சேற்றுக் கறைகள் இருந்தன என்றும், சந்தேகநபரின் உடலில் கீறல்கள் இருந்தன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடைக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
ஆயிஷாவின் உடல் நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போதுவரை 20க்கும் அதிகமானவர்களிடம் பல மணி நேர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. இதற்கு மேலதிகமாக தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடையில் இருந்து ஆயிஷா வெளியேறும் காட்சிகள் பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ள நிலையில், கடைக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட 150 மீற்றர் தூரத்துக்கு பாதுகாப்புக் கமராக்கள் இல்லை. அந்தப் பகுதியில் வைத்தே ஆயிஷா கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகம் என்று கூறப்படும் நிலையில், ஐந்து பொலிஸ் குழுக்களும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிறுமி ஆயிஷாவின் உடல் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று உடற்கூற்றுப் பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.
மூன்று சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்னரே மேலதிக விவரங்கள் தெரியவரும்.
Discussion about this post