மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை நீண்ட காலத்துக்குக் கொள்வனவு செய்வதற்குப் புதிய விலை மனு கோரப்படவுள்ளபோதும், அடுத்த மாதம் நீண்ட மின்வெட்டைத் தடுக்க முடியாது என்று இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவித்தன.
நீண்ட கால கடன் அடிப்படையில் நிலக்கரியை வழங்கக்கூடிய பொருத்தமான வழங்குநர்களுக்கான புதிய சர்வதேச திறந்த போட்டி மனுக் கோரலை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலக்கரி தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் கடந்த வருடம் வழங்கப்பட்ட மனுக் கோரலுக்கமைய பெறப்பட்ட 19 கப்பல்களின் நிலக்கரி இருப்புக்களை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆயினும் கப்பல் ஒன்று நாட்டுக்கு வருவதற்கு 20 நாள்களுக்கு மேல் ஆகும் என மின்சார சபைத் தகவல்கள் கூறுகின்றன. அதுவரை தற்போதுள்ள நிலக்கரி போதுமானதாக இருக்காது என மின்சார சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதனால் அடுத்த மாதம் முதல் 8 மணி முதல் 10 மணித்தியாலங்கள் வரை தினசரி மின்வெட்டு நீடிக்கப்படும் என சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் ரஷ்யாவில் இருந்து நாட்டை அடைய 20 நாள்களுக்கு மேல் ஆகும். ஆனால் இதுவரை நிலக்கரி வழங்க எந்த வழங்குநர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.
60 ஆயிரம் மெட்ரிக் தொன் கொண்ட 40 கப்பல்கள் ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் நாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்குப் பின்னர் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் நிலக்கரி கொண்டுவருவது சாத்தியமாக இருக்காது என்று கூறப்படுகின்றது.
அதனால் 5 நாள்களுக்கு ஒருமுறை ஒரு கப்பல் நாட்டுக்கு வர வேண்டும். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு கடல் கொந்தளிப்புக்கு முன்னதாக நிலக்கரி ஏற்றிச் செல்லும் 40 கப்பல்களை நாட்டிற்கு கொண்டு வர முடியாது என மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Discussion about this post