ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்களின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் வாரம் நிலையான அமைச்சரவையினை அமைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணைய பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் நிலையான அமைச்சரவையை அமைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 22ஆம் திகதி பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டதை தொடர்ந்து 18 அமைச்சுக்களை உள்ளடக்கிய வகையில் தற்காலிக அமைச்சரவை நியமிக்கப்பட்டது.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள பின்னணியில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.
இவ்வாறான நிலையில் தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக நிலையான அமைச்சரவையை நியமிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
நிலையான அமைச்சரவையில் பிரசன்ன ரணதுங்க,ஜனக பண்டார தென்னகோன்,ஜோன்ஸ்டன் பிரனாந்து,ரோஹித அபேகுணவர்தன,பவித்ரா வன்னியராட்சி,எஸ்.எம். சந்திரசேன,நாமல் ராஜபக்ஷ,ரமேஷ் பதிரன,பந்துல குணவர்தன,சனத் நிஷாந்த,கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது.
நிலையான அமைச்சரவையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான்,அதாவுல்லா ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அமைச்சரவையின் அமைச்சுகள் 30ஆக வரையறுக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது.
Discussion about this post