கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சிறார் துஸ்பிரயோக வழக்கு தொடர்பாக ஒரே கட்டத்தில் 107 பேர்கள் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் சிறார் துஸ்பிரயோகம் மற்றும் தவறான நோக்கத்துடன் இணையத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொலிசார் Maverick என்ற பெயரில் திட்டமொன்றை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஒன்ராறியோ பொலிசாருடன் 27 குழுக்கள் இணைந்து குறித்த திட்டத்தை முன்னெடுத்தது. இதில், அக்டோபர் மாதத்தில் மட்டும் 227 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.
168 தேடுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பில் 1,032 கருவிகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், 107 நபர் மீது 428 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தாலும், ஒருமாத காலம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 61 சிறார்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 60 சிறார்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சிறார் துஸ்பிரயோகம் தொடர்பில் மேலும் 175 விசாரணைகள் தொடர்வதாகவும், எதிர்வரும் நாட்களில் வழக்குப் பதியப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் மட்டும் 20 இடங்களில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதில் 23 பேர் கைதாகியுள்ளதாகவும் அவர்கள் மீது 96 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் காட்சிகள் உள்ளிட்ட 131 கருவிகளை கைப்பற்றியுள்ளதாகவும், இவர்களால் பாதிக்கப்பட்ட 22 சிறார்கள் அடையாளம் காணப்பட்டு அதில் 10 சிறார்களை பத்திரப்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post