காசாவின் வட பிராந்தியத்திலுள்ள மக்களை தெற்கு நோக்கி இடம்பெயருமாறு உத்தரவிட்டிருந்த இஸ்ரேல், தென் பிராந்தியத்திலுள்ள நிலைகள் மீதும் தாக்குதல்களை தொடுத்துள்ளது.
இதன்மூலம் காசாவின் தென் பிராந்தியமும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய ரீதியில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
எதிரிகள் மீதே தாக்குதல்
காசாவின் வட பிராந்தியம் நோக்கி நகர்ந்த வாகனத் தொடரணி மீதான தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 70 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை செய்வதாக இஸ்ரேல் கூறியுள்ள போதிலும் மக்கள் செல்வதை தடுத்த எதிரிகள் மீதே தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்திய தாக்குதல்களில் 320 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இஸ்ரேலின் தாக்குதல்களில் 2 ஆயிரத்து 200 ற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ள அதேவேளை 8 ஆயிரத்து 700 ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களில் ஆயிரத்து 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 3 ஆயிரத்து 400 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் கடந்த வாரத்தில் மாத்திரம் 50 பேர் பலியாகியுள்ள அதேவேளை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் கைது
மேற்கு கரையில் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஹமாஸ் போராளிக் குழுவினால் கடத்தப்பட்ட தமது நாட்டு பிரஜைகள், படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக முன்னர் வெளியிட்ட தகவலை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது.
தமது நாட்டின் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் இயக்க கட்டளைத் தளபதி அலி காஜி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் காசா மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் எந்தவொரு முயற்சிகளையும் நிராகரிப்பதாக கட்டார் தெரிவித்துள்ளது.
காசா மீதான முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ள கட்டார், சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைய காஸா மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவோம் என கூறியுள்ளது.
காசாவில் குடிநீர் முடிவடையும் தறுவாயில் உள்ளதான நிலையில், 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகவர் நிறுவனம் எச்சரித்துள்ளது.
சாவின் விளிம்பில் மக்கள்
உயர்வாழ்வதற்கும் சாவிற்குமான விளிம்பில் மக்கள் உள்ளதுடன், கிணறுகளில் இருந்து அசுத்தமான நீரை பருக வேண்டிய நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் செய்யும் போர்க் குற்றங்களுக்கு உலகமே பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன் கூறியுள்ளார்.
லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சியோனிச அரசினால் கடந்த ஒரு வாரம் முழுவதும் பாலஸ்தீனிய குடிமக்களைக் கொல்வதைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடியவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே தெற்கு லெபானானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரொய்ட்டரஸ் செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மன்னிப்பு கோரியுள்ளது.
Discussion about this post