கிளிநொச்சியின் மேற்கில் நகரிலிருந்து 8 கிலோ மீற்றர் தொலையில் உள்ள
கிராமம் ஒன்றிலிருந்து கடந்த வாரம் ஒரு தொலைபேசி அழைப்பு.
அழைப்பை மேற்கொண்டவர் தம்பி என்ற சாப்பாட்டில மண் அள்ளி போட்டுட்டாங்கள்
இதை யாரும் தட்டிக் கேட்க மாட்டீங்களா? என மிகவும் வேதனையுடன் கூறினார்.
என்ன நடந்தது எனக் கேட்ட போது அவர் சொன்னார்
யானை வெட்டையில் குளத்திற்கு கீழ் பக்கம் எனக்கும் வயல் காணி இருக்கிறது.
வருடத்திற்கு ஒரு போகம் மழையை நம்பி விதைக்கிறனாங்கள். சில நேரம அறுவடை
திருப்த்தியாக இருக்கும் பல தடவைகள் எங்களுடை சாப்பாட்டுத் தேவைக்கு
என்றாலும் நெல் கிடைக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக என்னுடைய
வயல்காணியின் பல இடங்களில் பாரியளவில் குழிகள் வெட்டப்பட்டு
சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து எடுத்துள்ளனர். இனி அக் காணியில் விதைக்க
முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது எனத் தெரிவித்த அவர்
எனது குடும்பத்தின் அரிசித் தேவையினை இந்த காணியே பூர்த்தி செய்தது
இப்போது அந்தக் காணியில் மண் அள்ளி என்ற குடும்பத்தின் சாப்பாட்டில் மண்
அள்ளிப் போட்டுடாட்டாங்கள் என்றார் அவர். கூலித் தொழில் செய்கின்ற அவர்
தனது வருமானத்தில் இனி அரிசிக்கும் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன் இரணைமடு கமக்கார
அமைப்புக்களின் சம்மேளனம் கிளிநொச்சியில் ஒரு ஆர்ப்பாட்டத்தை
மேற்கொண்டிருந்தார்கள் இதன் போது அவர்கள் முன்வைத்த கோரிக்கை
இரணைமடுகுளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கங்கள் என்பதே. காரணம்
இரணைமடுகுளத்தின் கீழ் பகுதிகளில் இடம்பெற்ற கட்டுக்கடங்காத சட்டவிரோத
மணல் அகழ்வே.
இவ்வாறே சில ஆண்டுகளுக்கு முன் கிளாலியில் ஒருவர் கூட்டுறவுச் சங்கக்
கடையின் கூரையில் ஏறி நின்று ஒரு போராட்டத்தை மேற்கொண்டார். அவரும்
சட்டவிரோத மணல் அகழ்விலிருந்து தங்களது கிராமத்தை பாதுகாக்க
முன்வாருங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
எனவே இந்த சம்பவங்கள் அனைத்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று
வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வின் விபரீதத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.
என்றும் இல்லாத அளவுக்கு கடந்த சில வருடங்களாக சட்டவிரோத மணல் அகழ்வு
கண்மூடித்தனமாக இடம்பெற்று வருகிறது. ஆறுகள், குளங்கள், வயல் நிலங்கள்,
காடுகள், பொது மக்களின் காணிகள் என சட்டவிரோத மணல் அகழ்வு
கட்டுக்கடங்காது செல்கிறது.
சமூகத்தின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சட்டவிரோத
செயற்பாடுகள் கிளிநொச்சியில் தலைவிரித்தாடுகிறது.
இயற்கையிலிருந்து மனித குலம் விலகி செல்லச் செல்ல மனிதகுலத்திற்கு எதிரான
சூழல் உருவாகி கொண்டே செல்கிறது. உலகில் வாழ்கின்ற உயிரிணங்களில்
மனிதகுலம் மாத்திரமே தனக்கு எதிரான நடவடிக்கைகளை தானே செய்கின்ற இனமாக
காணப்படுகிறது. பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தும்
குறுகிய சுயலாப தேவைகளுக்காக மனிதர்கள் இயற்கை அழித்து வருகின்றார்கள்
அல்லது இயற்கை பயன்படுத்துகின்றார்கள்.
இந்த நூற்றாண்டில் உலகம் நவீன தொழிநுட்ப யுகத்தில் வேகமாக முன்னேறிச்
செல்கின்ற அதேவேளை இயற்கை சூழலிலிருந்தும் உலகம் விடுப்பட்டு செல்கிறது
இந்த விடுபடும் இடைவெளி அதிகரித்துச் செல்ல செல்ல மனிதன் வாழும் சூழல்
வாழ்வதற்கு எதிரான நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. நிலம் நீர்
வளி என்பன மனித நடவடிக்கைகளால் பெரிதும் பாதிப்படைந்து செல்கிறது.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் இரவு பகல் என்றில்லாது மணல்
அகழ்வில் ஈடுப்படுவதனால் அந்தப் பிரதேசங்கள் மிக மோசமான சூழல்
பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளன. குறித்த பிரதேசங்களில் காணப்படுகின்ற
மரங்கள் செடிகள் என்பன அழிவடைவதோடு கடற்கரை பிரதேசங்களில் கடல் மட்டத்தை
விட ஆழமாக மணல் அகழப்படுவதனால் கடல் நீர் உட்புகுந்து நிலம் நீர் என்பன
உவராகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படுகின்ற தாக்கம் விவசாயம்இ
குடிநீர் என எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்கள் வாழ முடியாத ஒரு
சூழலுக்குள் அந்தப் பிரதேசங்களை கொண்டு செனறுவிடும் நிலைமைகள் உருவாக்கி
வருகிறது.
சில மணல் வியாபாரிகளுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் வேறு
சிலருக்கு பாதுகாப்புத் தரப்பினரின் செல்வாக்கு இருப்பதனாலும் அவர்கள்
துணிந்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றனர் என பொது மக்கள்
தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அத்தோடு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு எதிராக
பிரதேசங்களில் குரல் கொடுக்கின்றவர்களை அவர்கள் அச்சுறுத்துகின்றனர் வீடு
புகுந்து வாளால் வெட்டுகின்றனர் எனவும் இதனால் அவர்களுக்கு பயந்து பொது
மக்களும் அமைதியாக இருந்து விடுகின்றனர் எனவும் பொது மக்களால்
தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள்
தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல் வழங்கும் பொது மக்களும்
காட்டிக்கொடுக்கப்படுகின்றனர் எனவும் பொது மக்கள் தரப்பில்
தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு கணியவளத் திணைக்களத்தின் முறையான கண்கானிப்பு இல்லாமையும்
சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் தொடர்ந்து செல்வதற்கு வழிவகுக்கிறது
எனவும் பொது குற்றம் சாட்டப்படுகின்றனர்.
ஆதாவது கணிய வளத்திணைக்களத்தினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில்
அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த அனுமதியின் போது குறித்த இடத்தில் குறிப்பிட்ட அளவு( கியூப்) மணல்
அகழவேண்டும் என்று திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டே அனுமதி வழங்கப்படும்
ஆனால் அங்கே குறித்த நபர் வழங்கப்பட்ட அளவை விட பல மடங்கு மணலை அகழ்ந்து
விடுகின்றார். இது தொடர்பில் முறையான கண்காணிப்பு எதனையும் மேற்கொள்வது
இல்லை எனவும் இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையோ அல்லது
அவர்களின் மணல் அகழ்வ அனுமதயினையோ நிறுத்துவதற்கு கூட நடவடிக்கைள்
மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி
வருகின்றனர்.
குறுகிய காலத்திற்குள் அதிகளவு இலாபத்தை உழைக்கும் நோக்குடன் எவ்வித சமூக
அக்கறையும் சுற்றுச் சூழல் நலன்களையும் கருத்தில் எடுக்காது சட்டவிரோத
மணல் அகழ்வு இடம்பெறுகிறது.
கிளிநொச்சியை பொறுத்தவரை மணல் அகழ்வு இடம்பெறும் பிரதேசங்களின் நிலமும்
நீரும் பெருமளவுக்கு வேகமாக உவராகி வரும் பிரதேசங்களாகும். இந்த நிலையில்
சட்டவிரோத மணல் அகழ்வு சட்டவிரோத காடழிப்பு கிரவல் அகழ்வு என்பன இச்
செயற்பாட்டினை மேலும் துரிதப்படுத்துகிறது. இது இன்னும் சில வருடங்களில்
இந்தப் பிரதேங்கள் மக்கள் வாழ முடியாத பிரதேசமாக மாற்றமடைய
வழிவகுக்கிறது. எமது அடுத்த தலைமுறைக்கு இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு
உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் சொத்துக்கள் சேர்க்க முற்படும் நாம் அவர்கள்
நிம்மதியாக வாழ நல்ல இயற்கை சூழல் இருக்க வேண்டும் என்பதை
மறந்துவிடுகின்றோம்.
சட்விரோத மணல் அகழ்வுக்கு வெட்டுகின்ற ஒவ்வொரு குழியும் அவர்கள் தங்களது
சந்ததியினருக்கு வெட்டுகின்ற புதைகுழிகளாக இருக்கும் என்பதனை அவர்கள்
உணர்வதாக தெரியவில்லை. சமூக அக்கறையற்றவர்கள் அதிகரித்துச் செல்லும்
சூழலில் கடுமையான சட்டநடவடிக்கைகளே இவற்றை கட்டுப்படுத்த உதவும். ஆனால்
பல இடங்களில் வேலியே பயிரை மேய்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன.
இந்த நிலையில்தான் பொது மக்கள் என்ன செய்வது என்று தெரியாத நிலையில்
இப்போது குமுறி கொண்டிருக்கிறார்கள். இந்த உலத்தில் இடம்பெற்ற
அநீதிகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக பல மக்கள் புரட்சிகள்
இடம்பெற்றிருக்கின்றன. எனவே என்றோ ஒரு நாள் இந்தச் சட்டவிரோத
செயற்பாடுகளுக்கு எதிராக குமுறிக்கொண்டிருக்கின்ற மக்களின் உணர்வுகள்
வெடிக்கும் அதுவே மாற்றத்தையும் ஏற்படுத்தும்
Discussion about this post