சவுதி அரேபியாவின் சுற்றுலா ஆணையத்தால் ”விசிட் சவுதி“ (Visit Saudi) என்றொரு இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தளமானது சவுதி அரேபியாவில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் தளங்கள், உணவகங்கள், மோல்கள், பாரம்பரிய சந்தைகள், ஹோட்டல்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்கள் பற்றிய விரிவான வழிகாட்டியை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் தேவையான இணைய இணைப்புகள் (Links) போன்றவற்றை உள்ளடக்கிய ‘விசிட் சவுதி’ இணையத்தளமானது, சவுதி நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்வமுள்ள பல அம்சங்களை நோக்கி வழிகாட்டுகிறது.
சுற்றுலா விசா
ஹோட்டல் மற்றும் விமானச் சீட்டு முன்பதிவுகள், சவுதியின் அனைத்து நகரங்களிலும் கலாசார, பொழுதுபோக்கு, சமூக மற்றும் பருவகால நிகழ்வுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டி, சுற்றுலாத் தளங்களுக்கான வழிகாட்டல் வரைபடங்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்கள் போன்ற அனைத்தையும் இத்தளமானது கொண்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இத்தளத்தினூடாக சவுதி அரேபியாவுக்குள் நுழைய சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன், இவ் இணையத்தளமானது அங்குள்ள அழகான இயற்கை பன்முகத்தன்மை, வளமான கலாச்சார வேறுபாடு மற்றும் அற்புதமான நினைவுச்சின்னங்களையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
அதிக சுற்றுலாப் பயணிகள்
இவ்வாறான முயற்சிகள் அனைத்தும் சவுதி அரேபியாவின் சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்கும், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்குமான ஏற்பாடுகளாகவே இருக்கின்றன.
உலகின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக அண்மைய நாட்களில் சவுதி அரேபியா மாறி மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Discussion about this post