புதிய இணைப்பு
நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்று (22) நண்பகல் 12 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணியில் இருந்து இன்று12 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
மூன்றாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என காவல்துறை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் உரிய அனுமதியின்றி நடமாடும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்
இரண்டாம் இணைப்பு
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்
ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கு காவல் நிலையங்களினால் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும் போது உங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் காவல்துறை ஊடக பிரிவு அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
ஊடக பிரிவு
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு (Colombo Bandaranaike International Airport) வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கின்ற தரப்பினர் தங்களது நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை அல்லது கடிதத்தை ஊரடங்கு கால பிரவேச ஆவணமாக பயன்படுத்த முடியும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அன்றி வேறு எந்த காரணங்களுக்காகவும் இருக்காதென நம்புவதாக தேசிய மக்கள் சக்தி விசேட அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.
வாக்குகளை என்னும் பணியில் எந்த தலையீடும் இருக்காத வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் செயற்படவேண்டும் என்பதுடன் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பென்றும் தேசிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
Discussion about this post