மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று சர்வகட்சி அரசு அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் உட்பட ஆரம்பகட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, இந்த அரசு மீது உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் நம்பிக்கை இல்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. அவர் தேசியப் பட்டியலில் சபைக்கு வந்தவர். மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை. பிரச்சினைகளும், வரிசைகளும் நீள்கின்றன. எனவே, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன்பின்னர் எழுந்த எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., விமலின் கருத்தை வரவேற்றார். மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரம் சர்வகட்சி அரசு அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எதிரணியின் மேலும் சில உறுப்பினர்களும் சர்வகட்சி அரசுக்குச் சார்பாகக் கருத்து வெளியிட்டனர்.
அதேவேளை, சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும என்று வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்குப் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கடந்த சனிக்கிழமை 10 அம்சங்களை முன்வைத்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.
Discussion about this post