தற்போதைய அரசாங்கத்துக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை. சர்வகட்சி அரசாங்கம் அமைந்தால் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற முடியும். நாட்டின் நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியும்.
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
சர்வகட்சி அரசாங்கம் அமைத்து சுமார் 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமித்து பொதுத் தேர்தலை நடத்தினால் சர்வதேசத்தின் ஆதரவைப் பெற முடியும். தற்போதைய அரசாங்கத்தின் மீது நாட்டில் நம்பிக்கை இல்லை. கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் செயற்பட்ட விதம் காரணமாக சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை அது கொண்டிருக்கவில்லை.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து தாம் பல தடவைகள் பேசிய போதும் ஜனாதிபதி அதற்கு சாதகமாக பதிலளிக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் நாட்டை நாளுக்கு நாள் சிக்கலாக்கி வருகின்றது. ஜனாதிபதியும், பிரதமரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தனித்தனியாகக் கூட்டிச் செல்வது இருவருக்குமிடையில் தொடர்பில்லை என்று தெரிகின்றது.
கட்சி சார்பற்ற அரசாங்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். ஜப்பான் இலங்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் நாடு, ஆனால் அதனுடனான இருதரப்பு உறவுகள் தற்போது சீர்குலைந்துள்ளன.
இலங்கையிடம் இல்லாத எண்ணெய், உரம், பூச்சிக்கொல்லி மற்றும் எரிவாயு அனைத்தும் ரஷ்யாவிடம் இருக்கின்றது. ஆனால் ரஷ்யா தனது விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இலங்கையில் இருந்து விலகியுள்ளது. -என்றார்.
Discussion about this post