சர்வதேச நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் தவறுதலாக அல்லது சட்டவிரோதமாக
நுழைகின்ற இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின்
இலங்கைக்கான தூதுவருக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெளிவுபடுத்தினார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில்
இன்று (28) நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைய்பி
தலைமையிலான குழுவினருக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கும் இடையிலான
கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தெளிவுபடுத்தப்பட்டது.
இச்சந்திப்பின் போது, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இலங்கை
கடற்றொழிலாளர்கள், எல்லைதாண்டிச் சென்று வெளிநாடுகளில் கைதாகின்ற
சமயங்களில் குறித்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள்,
பின்னர் அவர்கள் இலங்கைக்கு திரும்புகின்றபோது படகு உரிமையாளர்களுக்கு
எதிராகவும் படகில் பணியாற்றிய தொழிலாளர்கள் மீதும் இலங்கையில்
மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக ஐரோப்பிய
ஒன்றியத்தின் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
Discussion about this post