சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மலேசியத் தமிழ் இளைஞர் தூக்கிலிடப்பட்டார் என்பதை உறவினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற அந்த நபர் 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து 43 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைத் தனது தொடை இடுக்கில் மறைத்து எடுத்து வந்த வேளை சிங்கப்பூர் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
உலகிலேயே மிக இறுக்கமான சிங்கப்பூரின் போதைப் பொருள் தடுப்புச் சட்டங்கள் 15 கிராமுக்கு மேற்பட்ட அளவிலான ஹெரோயின் கடத்தலுக்கு மரண தண்டனையை வழங்க அதிகாரமளிக்கிறது.
நாகேந்திரன் மீதான குற்ற விசாரணைகள் கடந்த ஒரு தசாப்த காலமாக நீடித்தன. தான் என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டே குற்றம் புரிந்துள்ளார் என்றும் கண்டறிந்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவ நிபுணர் ஒருவர், நாகேந்திரன் ‘புத்திக் கூர்மை அல்லது அறிவு சார்ந்த குறைபாடுடையவர்’ என்பதைக் கண்டறிந்தார்.
அதனால் அவரது வழக்கு விவகாரம் சர்வதேச மட்டத்தில் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறி யிருந்தது. அறிவுசார் குறைபாடு கொண்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் வெடித்தன.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்குமாறு செய்யப்பட்ட பல மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. கடைசியாக நாகேந்திரனின் தாயார் கருணை காட்டக் கோரிச் செய்த முறையீடும் நேற்று நிராகரிக்கப்பட்டதை அடுத்தே சட்ட விதிமுறைகளின் படி அவர் தூக்கிலிடப்பட்டார். சிங்கப்பூரின் சாங்கி சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நீதிமன்றில் அவரது குடும்பத்தினர் அவரது கைகளை பற்றி இறுதி விடை கொடுத்த சமயத்தில் நாகேந்திரன் “அம்மா” என்று கதறினார் என “ரொய்ட்டர்” செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
Discussion about this post