சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி – கரந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று(10) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருந்தமையே நாடு வங்குரோத்தடைவதற்கு முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இறக்குமதிக்காக பாரியளவில் கடன்கள் பெறப்பட்டதாக குறிப்பிட்டார்.
சரியான பொருளாதாரக் கொள்கைகளால், நாடு தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட முடிந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாடு பயணிக்காத பட்சத்தில் இன்னும் 15 வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, நாடு விரைவில் ஒரு புதிய பொருளாதாரக் கட்டமைப்பிற்கு செல்ல வேண்டும் எனவும் அங்கு ஏற்றுமதி பொருளாதாரம் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையில் இருந்து நாட்டை மீட்டுள்ளதுடன், நாடு சரியான பாதையில் செல்லாவிட்டால், தற்போது பெறப்பட்டுள்ள வெற்றி கையிலிருந்து நழுவக்கூடும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Discussion about this post