இலங்கைக் கடற்பரப்பில் கடந்த 8 நாள்களாகத் தரிந்து நின்ற எரிவாயுக் கப்பலுக்குக் கட்டணம் செலுத்தப்பட்டதை அடுத்து, அதிலிருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் 3 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் எரிவாயு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவமனைகள், உணவகங்கள் மற்றும் தகனசாலைகளுக்கே வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
தற்போது எரிவாயு தரையிறக்கப்படுகின்றது. நான் நாளை (இன்று) பதவியேற்ற பின்னர் விநியோகத்துக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித்த பீரிஸ் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டில் சமையல் எரிவாயுக்குப் பெரும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. சமையல் எரிவாயுக்கான மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
சில இடங்களில் மக்கள் பொறுமையிழந்து போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post