தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைச் சந்திப்பதற்காக கொழும்பு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையே நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி செயலகம் இந்தச்சந்திப்புக்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தது.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகப் பரவலாக அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனும், சிவில் சமூக அமைப்புகளுடனும் அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையிலும், தமிழருக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இந்திய அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் நிலையிலும் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சந்திப்பில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் கொழும்புக்குப் பயணமாகியிருந்தனர். சந்திப்புக்கு முன்னதாக கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இல்லத்தில் ஒன்றுகூடி அவர்கள் கலந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தனர்.
ஆயினும் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டது.
அதேவேளை ஒத்திவைக்கப்பட்ட இந்தச் சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திதகி முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறும் என்றும் ஜனாதிபதி செயலத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்த நிலையில், அந்தச் சந்திப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post