தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் அரசமைப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது தொடர்பாகக் கவனம் செலுத்தப்படுகின்றது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவிததுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதைத் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 முக்கிய தீர்மானங்களை அதன் நிறைவேற்று சபையில் முன்வைத்து ஏகமனதாக நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இந்த பிரேரணைகள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் போது அனைத்து முன்மொழிவுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், செயலாளர் சட்டத்தரணி இசுரு பாலபடபெந்தி, மற்றும் நிறைவேற்று சபை உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.- என்றுள்ளது.
Discussion about this post