சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அண்மையில் பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று நடந்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலை, காந்திபுரத்தைச் சேர்ந்த பொலிஸ் கொன்ஸ்தாபிளான 24 வயதுடைய கணேசரட்ணம் ஹரிகரன் என்வரே உயிரிழந்துள்ளார்.
அவருடன் ஒன்றாகப் பயணித்த மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரான கல்முனையைச் சேர்ந்த ஆர்.லிகிதன் படுகாயமடைந்துள்ளார்.
மன்னாரில் கடமையாற்றும் இருவரும் பணி நிமித்தம் யாழ்ப்பாணம் வந்துவிட்டு, மன்னார் நோக்கிச் செல்லும்போதே விபத்து நடநதுள்ளது.
சங்குப்பிட்டிப் பாலம் கடந்து இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் பூநகரிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post