ஏன் அம்பிகைக்கு நவராத்திரி?
அம்பிகை என்பவள் அபிவிருத்தி செய்யக்கூடியவள், விஸ்தரிப்பு செய்பவள். பெருக்குபவள்.
இந்த அம்பிகை நம் மீது காரணமே இல்லாமல் அளவு கடந்த கருணை காட்டுபவள். உலகிற்குப் படி அளக்கும் அன்னபூரணி ஆவாள். இதனால் நவராத்திரி தினத்தில் நாம் அம்பிகையை விரதம் இருந்து பல்வேறு வடிவில் வழிபடுகின்றோம்.
நவராத்திரியில் பெண்களுக்கு என்ன விஷேசம்?
மகிஷாசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் கடும் தவம் மேற்கொண்டு பிரம்ம தேவனிடம் தனக்கு மரணம் இல்லா வரம் தா என்றான். உலகில் பிறந்தவர்கள் இறக்கத் தான் வேண்டும் என்றார் பிரம்ம தேவன். இதனால் மகிசாசுரன், “எனக்கு மரணம் ஒரு பெண்ணால் தான் நிகழ வேண்டும்” என வரம் கேட்டான்.
ஏனென்றால் ஒரு பெண்ணால் என்னை கொல்ல முடியாது. அவளுக்கு அவ்வளவு சக்தி இல்லை, பெண் என்பவள் பலவீனமானவள் என அவன் நம்பினான்.
மகிஷாசுர மர்த்தினி:
ஆனால் அம்பிகையோ,9 நாட்கள் கடும் தவம், விரதம் இருந்து மூன்று தேவிகள் இணைந்து ஒரு சொரூபமாக, மகிஷாசுர மர்த்தினியாக சூரனை வதம் செய்தார். பெண் என்பவள் ஆற்றல் நிறைந்தவள், அவள் ஒரு சக்தி என்பதைத் தான் இந்த நவராத்திரி நமக்கு உணர்த்துகின்றது.
மகிசம் என்றால் எருமை. அது சோம்பலையும், அறியாமையையும் தரும். இந்த இரண்டையும் நம்மிடமிருந்து அகற்றும் நோக்கில் நாம் நவராத்திரியில் அம்பிகையை வழிபடுகின்றோம்.
Golu Bommai: நவராத்திரி கொலு வைப்பது எப்படி? கொலு வைக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
நவராத்திரி அம்மன் வழிபாடு:
துர்க்கை
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் நாம் அம்பிகையை துர்க்கையாக வழிபடுகின்றோம்.
துர்கை என்றால் அறன், பாதுகாப்பு என்று பொருள். அரண்மனைக்கு வெளியே இருக்கும் அகழியைப் போல. நீரிலிருந்தால் அது ஜல துர்க்கம், நெருப்பாக இருப்பதற்கு அக்னி துர்க்கம் என அழைக்கின்றோம். துர்க்கையை தமிழில் கொற்றவை என அழைக்கின்றோம்.
மகா லட்சுமி:
அடுத்த மூன்று நாட்கள் நாம் மகா லட்சுமியாக வழிபடுகின்றோம்.
மகாலட்சுமி விஷ்ணு பகவானின் மார்பில் இருக்கின்றாளா?.. இல்லை எவன் ஒருவன் தன் வீட்டில் விருந்தினர்களை இன்முகத்தோடு, உபசரித்து, விருந்தோம்பலை தவறாது செய்கின்றனரோ அவர்கள் வீட்டில் மகா லட்சுமி நிரந்தரமாகக் குடி கொண்டிருப்பாள்.
சரஸ்வதி:
கடைசி மூன்று நாட்கள் நாம் சரஸ்வதி தேவியை வழிபடுவது வழக்கம்.
ஏன் கடைசியாக சரஸ்வதியை வழிபடுகின்றோம் தெரியுமா?… ஏனெனில், பட்டால் தானே புத்தி வரும் என்பார்கள். அது போல இன்பம், துன்பம் என அனைத்தையும் உணர்ந்து அதிலிருந்து வாழ்க்கை பாடத்தை கற்பதால் சரஸ்வதி தேவியை கடைசியாக வணங்குகின்றோம்.
சரஸ்வதி தேவியின் அருளால் ஒருவன் எவரின் துணையும் இல்லாமல் சிறப்பாக வாழ முடியும்.
நவராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டும்?: அறிவியல், ஆன்மிக பின்னனி
நவராத்திரி 9 நாட்கள் 9 அவதாரம்:
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதார அம்பிகையை வழிபடக் காத்திருக்கின்றோம்.
ஒவ்வொரு நாளும் வணங்கும் அம்பிகையின் வரிசையைப் பார்ப்போம்…
சாமுண்டீஸ்வரி:
சண்டர், முண்டர் ஆகிய அசுரர்களை அழித்தவர். தீமைகளை அழிப்பவள்.
வராகி:
லலித்தாம்பிகையின் படைத்தளபதி, சேனாதிபதியாக இருப்பவள். அதோடு அதர்வண வேதத்தின் தலைவியாக இருப்பவள்.
விசுக்ரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக லலித்தாம்பிகையால் தோற்றுவிக்கப்பட்ட இந்த வராகி தேவியை 2ஆம் நாள் வழிபடுகின்றோம்.
இந்திராணி:
இந்திரனின் அம்சமாகவும், இந்திராணியாகவும் விளங்குபவள். வெள்ளையானையில் வளம் வரக்கூடியவளாகவும், வஜ்ராயுதத்தை தரித்திருப்பவளாகத் திகழ்பவள்.
யாருக்கெல்லாம் பதவி வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்களுக்கு இந்திராணியின் கருணையால் தான் கிடைக்கும். இதனால் 3ம் நாள் வழிபடுகின்றோம்.
வைஷ்ணவி தேவி:
இவள் பகவான் நாராயணனின் அம்சமாக உள்ளாள். இவளை 4ம் நாள் வழிபடுகின்றோம்.
மகேஸ்வரி:
மகேஷ்வரனின் அம்சமாக திகழ்பவளும் மகேஸ்வரியை 5ம் நாள் வழிபடுகின்றோம்.
கெளமாரி அம்மன்:
முருகனின் அம்சமான மயிலை வாகனமாகக் கொண்ட கெளமாரி அம்மனை 6ஆம் நாள் வழிபடுகின்றோம்.
சாம்பவி அம்மன்:
எல்லா சம்பத்துக்களையும் தரக்கூடிய சாம்பவியை 7ஆம் நாள் வழிபடுகின்றோம்.
துர்க்கையின் 9 வடிவங்கள்: நவதுர்க்கை வடிவமும், சிறப்பம்சமும்
நரசிம்மி:
நரசிம்மனின் அம்சமான நரசிம்மி தேவியை 8ஆம் நாள் வழிபடுகின்றோம்.
இவள் வேலையில் யார் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களை வதம் செய்யக் கூடியவளாக உள்ளார்.
பிரம்மி:
ஒன்பதாம் நாள், நிறைவு நாளில் நாம் பிரம்மியை வழிபடுகின்றோம். அவள் வெள்ளை தாமரையில் வீற்று, அன்ன வாகனத்தை கொண்டு, நம் எல்லோருக்கும் ஞானத்தை அளிப்பவளாக திகழ்கின்றாள். வாக்கிற்கு அதிபதியாகவும், கலை வாணியாகவும் காட்சி தருகின்றாள்.
இப்படி அம்பிகையை 9 ரூபங்களால் நவராத்திரியில் வழிபடுகின்றோம். வீட்டில் கொலு வைத்தும், சித்திரானங்கள், நவதானியங்கள் நெய்வேதியம் செய்து வழிபடுகின்றோம்.
இந்த நவராத்திரி தினங்களில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் நமக்கு எல்லா விதமான அருளும் கிடைத்து மேன்மை அடையலாம்.
Discussion about this post