ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது தொடர்பில் பெரும்பான்மையினரின் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சி சார்பற்ற அரசாங்கத்தை உருவாக்குவது மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில், பிரதமர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் உள்ளதாவது, அரசமைப்பின் 21 ஆவது திருத்தத்தை விரைவில் நிறைவேற்றுவதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறக்கூடிய நிறைவேற்று அதிகாரமொன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளேன்.
21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றேன்.
நாட்டை ஸ்திரப்படுத்தியவுடன் பொதுத்தேர்தலை நடத்துவதில் ஆட்சேபனை இல்லை. ஆயினும் எதிர்வரும் சில மாதங்களுக்கு அர்ப்பணிப்புடனும் கூட்டாகவும் செயற்பட்டு நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டும். கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கு உங்கள் ஆதரவைக் கோருகின்றேன் என்றுள்ளது.
Discussion about this post