நாடு எதிர்கொள்ளும் இன்றைய நெருக்கடியில் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றால் முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்தவேண்டும். கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக வைத்துக்கொண்டு எம்மால் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியாது. இன்றைய நெருக்கடிக்கு தேசிய அரசாங்கம் தீர்வாக அமையாது.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை வைத்துக்கொண்டு எமது அரசாங்கத்தை அமைத்துக்கொண்டால் எமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இடமளிக்க மாட்டார். இதற்கு முன்னரும் அவ்வாறான அனுபவம் எமக்குள்ளது.
முதலில் தற்போதைய ஜனாதிபதியை மாற்றி எமக்கான ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே எமக்கான அரசாங்கத்தை அமைக்க வேண்டும். ராஜபக்சவினர் ஆட்சியில் நாட்டை சரியாக வழிநடத்துவோம் என்றனர். தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என்றனர்.
ஆனால் இன்று சகல விதத்திலும் நாடு நாசமாகிக்கொண்டுள்ளது. ஒரு சிறிய நாடான எம்மால் விரைவாக அபிவிருத்தியை நோக்கி செல்ல முடியும். ஆனாலும் அவ்வாறு பயணிக்க முடியாதுள்ளது என்றால் எமது ஆட்சியாளர்களின் தவறான கொள்கையே அதற்கு காரணமாகும்.
நாட்டிற்கு தேவையானவற்றை நிராகரித்துவிட்டு அவசியம் இல்லாத விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே நெருக்கடிக்கு காரணமாகும். முதலில் நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும், சகல மக்களுக்கும் அவசியமானவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தூய்மையான அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டும். குடும்ப ஆட்சி, பரம்பரை ஆட்சி ஆகிய கொள்கையை அரசியல்வாதிகளின் மனதில் இருந்து நீக்க வேண்டும்.
தேசிய அரசாங்கம் தொடர்பாகப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, இன்றைய சூழ்நிலையில் தேசிய அரசாங்கம் தீர்வு அல்ல. தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதென்றால் ரணில் விக்கிரமசிங்கதான் பொருத்தமானவராக இருப்பார். அவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியாக உள்ளவர்கள் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
Discussion about this post