நாட்டை மேலும் அராஜக நிலைக்கு ஆளாக்காமல் எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும்.
இல்லாவிட்டால் அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்து வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தேரர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
தேரர்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் 11 தேரர்கள் கைச்சாத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டை தொடர்ந்து அராஜக நிலைக்குக் கொண்டு செல்லாமல் எதிர்வரும் 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவேண்டும். அவ்வாறு விலகாவிட்டால், நாட்டில் இருக்கும் அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்து வந்து 7ஆம் திகதியில் இருந்து தொடர் போராட்டத்தை மேற்கொள்வோம்.
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினை மற்றும் அராஜக நிலைமையை சீர் செய்வது தொடர்பாக உடனடியாகச் செயற்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் கூட்டாக கைச்சாத்திட்டு அனுப்பிய கடிதத்துக்கு ஆரோக்கியமான பதிலொன்றை அரசாங்கங்கம் தெரிவிக்காத காரணத்தால் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம்.
பெளத்த மக்களின் வாக்குகளின் மூலம் அதிகாரத்துக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வதாக ருவன்வெலிசாய புனித பூமியிலும் ஸ்ரீமஹா புத்த பெருமான் நிலைகொண்டுள்ள புனித பூமியிலும் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு ஜனாதிபதி மக்களை ஏமாற்றி இருக்கின்றார் என்பது அவர், மஹாநாயக்க தேரர்களின் கடித்தத்துக்கு பதில் அளிக்காததன் மூலம் தெரியவருகின்றது.
ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து பெளத்த தேரர்கள் உட்பட 69இலட்சம் பெரும்பான்மை மக்கள் ஜனாதிபதியை தெரிவுசெய்து கொண்ட போதும் தற்போது அந்த மக்களுக்கு ஜனாதிபதி தொடர்பாக கடுகளவேனும் நம்பிக்கை இல்லை.
கோத்தாபய ராஜபக்சவைத் தொடர்ந்தும் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள தேரர்கள் உட்பட நாட்டு மக்கள் தயார் இல்லை.
நாடு பெரும் அழிவொன்றை காணும் நிலையில் இருக்கும்போது, அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில் 22மில்லியன் மக்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவர்களின் சார்பில் நடவடிக்கை எடுக்கவேண்டியது தேரர்களின் பிரதான கடமை என்பதால் இந்த கோரிக்கையை விடுக்கின்றோம்.- என்றுள்ளது.
Discussion about this post