ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று – வெற்றி பெற்ற ஜனாதிபதியாக அவர் பதவி விலகும் வரையில் நாட்டு மக்கள் துன்பத்தை அனுபவிக்க நேரிடும். அவர் பதவி விலகவில்லை என்றால் எதிர்வரும் இரு ஆண்டுகள் மட்டுமல்ல, அதன்பின்னரும் நீண்டகாலம் மக்கள் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
அரசியல் மறுசீரமைப்பு ஏற்படுத்துவதில் பொதுஜன பெரமுன கட்சிககுள் முரண்பட்ட நிலைப்பாடுகளே காணப்படுகின்றன. அதனாலேயே 21ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் இழுபறி நிலைமை தோன்றியிருக்கின்றது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டதன் பின்னர் 21 தொடர்பாகச் சிந்திக்கலாம் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் மறுசீரமைப்பின் ஊடான மாற்றம் வேண்டும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பிலும், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளோம். அடுத்த வாரத்திலிருந்து சீனி இறக்குமதியிலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதைத் தடுப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.-என்றார்.
Discussion about this post