கோண்டாவிலில் உள்ள களஞ்சிய வளாகம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை உடைத்து சுமார் 11 லட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் திருட்டுத் தொடர்பில் இன்னுமொருவர் தேடப்பட்டு வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
திருநெல்வேலியில் அமைந்துள்ள இலத்திரனில் பொருள்கள் விற்பனை நிலையத்தின் களஞ்சியம் கோண்டாவிலில் உள்ளது. கடந்த மாதம் வர்த்தக நிலையத்துக்கு எடுத்து வருவதற்காக பாரவூர்தியில் பொருள்கள் ஏற்றப்பட்ட நிலையில் டீசல் இல்லாததால் வாகனம் தரித்துவிடப்பட்டிருந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில் இரவுவேளை பாரவூர்தி உடைக்கப்பட்டு சுமார் 11 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டன.
இந்தத் திருட்டுத் தொடர்பில் வர்த்தகரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோண்டாவிலைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே பொருள்களைத் திருடியுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், அவர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் தெரிவித்தனர்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே 4 வழக்குகளில் நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post