கொழும்புக்கு வருகின்ற வெளிநாட்டு விமானங்கள் திரும்பிச் செல்வதற்கான போதிய எரிபொருளை நிரப்பி வருமாறுகேட்கப்பட்டுள்ளன. அல்லது அயல்நாடு ஒன்றில் அதனை நிரப்பிக் கொள்ளு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் விமான எரிபொருள் (aviation fuel) கையிருப்பைப் பேணுகின்ற முன்ஏற்பாடாக இந்த ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபைப் பணிப்பாளர்களில் ஒருவர் வெளிநாட்டு செய்தி ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.
கொழும்பு விமான நிலையத்தில் வைத்து எரிபொருள் நிரப்புவது இன்னமும் நிறுத்தப்படாவிட்டாலும் விமானப் பயண சேவைகள் தடைப்படாது தொடர்ந்து நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற் காகவே இவ்வாறு போதிய எரிபொருளை நிரப்பி வருமாறு விமான சேவை நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
டுபாய்க்குச் சொந்தமான எமிரேட்ஸ்(Emirates Airline) உட்படக் கொழும்பு செல்கின்ற சில வெளிநாட்டு விமானங்கள் வழமையை விட அதிகளவுஎரிபொருளை நிரப்பியவாறு பறக்கின்றன என்றும் சிறிலங்கா விமான சேவையின் நீண்ட தூர விமானங்கள் தென்னிந்தியாவின் விமான நிலையங்களில் இடையில் தரித்து எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ழும்பு செல்லும் சிங்கப்பூர் விமானங்கள் மேலதிக எரிபொருளை நிரப்பிக்கொண்டு அங்கு பறக்கின்றன என்பதை சிங்கப்பூர் விமான சேவை நிறுவன அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு சென்று திரும்பும் சர்வதேச விமானங்கள் கடந்த சில நாட்களாக தென்னிந்தியாவில் உள்ள விமான
நிலையங்களில் இறங்கி எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன என்ற தகவலை இந்திய எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. நாளாந்த தேவைக்கான எரிபொருள்கள் உட்பட
அத்தியாவசியப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பும் முற்றாகத் தீர்ந்துவிடலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Discussion about this post