கொழும்பின் பல பகுதிகளில் வாகன தரிப்பிடங்களில் அதிக கட்டணம் அறவிடப்படுவது தொடர்பில் வாகன சாரதிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
அதன்படி கொழும்பு மாநகரசபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட வாகன தரிப்பிடங்கள் மற்றும் வீதிகளில் வாகனங்களுக்கு அறவிடப்படும் தரிப்பிட கட்டணத்தை விட, அதிக தொகையையே நகர அபிவிருத்தி அதிகார சபை அறவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தரிப்பிட கட்டணத்திற்கான பற்றுச்சீட்டு வழங்காமல் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் சாரதிகளுக்கும், போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை கொழும்பு மாநகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனத் தரிப்பிடங்களுக்கு இணையான தொகையை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனத் தரிப்பிடங்களும் அறவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த விடயம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் தற்போதுள்ள வாகன தரிப்பிடங்களில் இருந்து இலத்திரனியல் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், சரியான முறைமை இல்லாமல் வாகன தரிப்பிட கட்டண வசூலிப்பானது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
Discussion about this post